தமிழகத்தில் உண்மையான மக்கள் அபிமானிகளும், காந்திய வாதிகளும், தேசியவாதிகளும் நிரம்ப இருந்தனர், அவர்களில் நாம் கண்ட முக்கியமான தலைவர் மூப்பனார்

பெரும் பண்ணையார், அதுவும் காவேரிகரையில் பண்ணையார். கிட்டதட்ட அரசகுடும்பம் போன்றது அது, செட்டிநாட்டு மன்னர்களுக்கு சற்றும் குறையாத செல்வாக்கு கொண்டது

அவர் குடும்பமே காங்கிரஸ் குடும்பம் என்ற வகையில் அதில் தொடர்ந்தார் மூப்பனார்

அரசியலுக்கு வந்து கோடி குவிப்போர் மத்தியில் நேரு போலவே பெரும் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்து உண்மையான தொண்டனாக வந்து நின்றார்.

அவருக்கு பசப்பு தமிழில் மயக்க தெரியாது, மேக் அப் போட்டு சிரிக்க தெரியாது. தெரிந்ததெல்லாம் நாட்டின் நலம் தமிழத்தில் இந்திய தேசியம் வளர்ப்பது, தமிழக‌ மக்களை வலுவான இந்தியாவில் இந்தியனாய் வாழசெய்வது

காங்கிரஸில் காமராஜரின் வலதுகரம் ஆனார், காங்கிரஸ் என்றால் காமராஜருக்கு அடுத்து மூப்பனார் என்ற நிலையினை எட்டினார்

சிதம்பரம், நெடுமாறன், குமரி அனந்தன் இன்னும் பலர் காமராஜரின் கரங்களை அருகிருந்து வலுபடுத்திய காலம் அது, பின்னாளில் சம்பத்தும் கண்ணதாசனும் சேர்ந்துகொண்டார்கள்

ஆனால் ராமசந்திரன் சுடபட்டதற்கும் காங்கிரஸ் ஆட்சிதான் காரணம், இன்னபிற அபாண்ட பிரச்சாரங்களுக்கு மத்தியில் காமராஜர் தோற்கடிக்கபட்டார்

இந்திராவின் திட்டபடி திமுக பிளக்கபட்டும் ராமசந்திரனை கட்சியில் சேர்க்க காமராஜர் விரும்பவில்லை, அதை தொடர்ந்து காமராஜர் இந்திரா மோதல் தொடர்ந்து கட்சி உடைந்தது

காமராஜர் ஸ்தாபன காங்கிரஸாக தொடர்ந்தார், திண்டுக்கல் இடைதேர்தலில் இரண்டாம் இடம், நாகர்கோவில் தேர்தலில் வெற்றி என காமராஜருக்கு ஆறுதல் கொடுத்த வெற்றிகளில் எல்லாம் மூப்பனாருக்கு பங்கு இருந்தது

காமராஜரின் உண்மை சீடராக இறுதிவரை நின்றார் மூப்பனார், காமராஜர் சம்பாதித்த மிகபெரும் சொத்து அவர்தான்

காமராஜருக்கு பின் அந்த கட்சியினை தாய் காங்கிரசோடு இணைத்தார், உண்மையான காங்கிரஸ் தொண்டனாக களத்தில் நின்றார்

டெல்லி காங்கிரஸ் தலைவர்களிடம் தனி மரியாதை பெற்றிருந்தார், அவர்களுடன் நேருக்கு நேர் வாதிடும் அளவு அவருக்கு அங்கு செல்வாக்கு இருந்தது

காங்கிரஸ் தமிழகத்தில் மலர அற்புதமான திட்டத்தை கொடுத்தார், அது இந்திரா தஞ்சாவூரில் போட்டி இடுவது

அதுமட்டும் நடந்து வெற்றிபெற்றிருந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் நிச்சயம் மலர்ந்திருக்கும், விடுவார்களா கழகத்தார்?

தமிழக அரசியலில் அதிமுக திமுக அடித்துகொண்டது போல் தோன்றினாலும் உள்ளூர ஒரு இழைஉண்டு, அது என்னவென்றால் தேசிய கட்சியினை வளரவிடமாட்டோம், நம் இருவரை தவிர இன்னொருவன் வரவே கூடாது என அண்ணா சமாதியில் ரகசிய சத்தியம் செய்திருந்தார்கள் என எண்ணும் அளவு காட்சிகள் இருந்தன‌

அதிமுகவிற்கும் காங்கிரசுக்கும் எப்பொழுதும் உறவு உண்டு, ஆனால் இந்திரா தமிழகத்தில் போட்டியிடுவதை உள்ளூர ராமசந்திரன் விரும்பவில்லை, வழக்கம் போல் குழப்பினார்

திமுகவோ மதுரையில் அவர்மேல் கல்வீசி தாக்கியது, பழநெடுமாறனும் மூப்பனாரும் இந்திராவினை கார் சீட்டுக்கு கீழ் மறைத்து காப்பாற்றினர், அப்பொழுதும் கல்வீச்சில் காயம்பட்டார் இந்திரா

இப்படி மூப்பனாரின் திட்டமும் பாழானது, இந்திரா தஞ்சாவூருக்கு வருவது தடைபட்டது

அதன் பின் இந்திராவும் கொல்லபட்டு ராஜிவ் வந்தார், மூப்பனார் அவருடனும் தொடர்ந்தார்

1987 தேர்தலில் ராஜிவோடு அரும்பாடுபட்ட மூப்பனாரை மறக்க முடியாது

1991ல் ராஜிவ் கலந்துகொண்ட சென்னை கூட்டத்தில் மூப்பனாரும் இருந்தார், ஆனால் மேடைக்கு ஏறும் முன்பே ராஜிவ் கொல்லபட்டதால் மூப்பனாரும் தப்பினார்

மூப்பனார் எப்படி தப்பினார் என்றால், கலைஞர் அஞ்சலிக்கு வந்த ராகுலே சாட்சி. அன்றும் கூட்ட நெரிசலில் ராஜிவ் அவசரமாக முன்னே செல்ல இந்திரா சிலை அருகே மூப்பனார் சிக்க, குண்டுவெடித்தது

1991 முதல் 1996 வரையான காலங்கள் தமிழகத்தின் கருப்பு நாட்கள், ஜெயா எனும் முகமூடி போட்டு சசிகலா கும்பல் தமிழகத்தினை அதிர வைத்த காலங்கள்

மூப்பனார் கூட தாக்கபட்டார், அசரவில்லை

அடுத்த தேர்தலில் ஆட்சியினை மாற்றும் கடப்பாட்டினை மூப்பனாரே கையில் எடுத்தார்

ஆனால் டெல்லியோ அதிமுகவோடு உறவு எனும் நிலைபாட்டில் இருந்தது, காரணம் ஜெயின் கமிஷன் விவகாரங்களில் திமுக காங்கிரஸ் உறவு ஏற்பட வாய்பின்றி இருந்தது

மூப்பனாருக்கு ஜெயாவோடு கூட்டணி வைக்க விருப்பமில்லை ஆனால் டெல்லி உறுதியாக நின்றது

மிக தைரியமாக தனிகட்சி தொடங்கினார் மூப்பனார், மக்களிடம் மகிழ்ச்சி பெருகிற்று

காமராஜர் திரும்பவந்தது போல ஆதரவு கொட்டிற்று

ஜெயகாந்தன் முதல் பல எழுத்தாளர் வரை, மாலன் முதல் பல பத்திரிகையாளர் வரை மூப்பனாரின் கரைபடியா கரங்கள் மேல் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர்

விளைவு மூப்பனார் பெரும் சக்தியானார், காலம் அவருக்கு வாய்ப்பு கொடுத்தது

யாரை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்பதில் கரைகண்ட கலைஞர் மூப்பனாரோடு கூட்டு சேர்ந்தார், உண்மையில் அன்று திமுக எம்.எல்.ஏ கணக்கு 1, காங்கிரஸுக்கு சொல்லிகொள்ளும் வகையில் கணக்கு இருந்தது

திமுகவினை விட காங்கிரஸ் கரம் ஓங்கித்தான் இருந்தது ஆனால் மூப்பனார் தனித்து வந்ததால் கலைஞரின் தந்திரம் வென்றது

மாபெரும் வெற்றியினை அக்கூட்டணி பெற்றது, மூப்பனாரின் செல்வாக்கு கூடிற்று

தமிழ் மாநில காங்கிரஸ் பெரும் சக்தியாயிற்று, பாரத பிரதமரை நிர்ணயிக்கும் அளவு அது செல்வாக்கு பெற்றது

ஏன் மூப்பனாரே பிரதமராகும் அளவு வாய்ப்பும் இருந்தது

இந்திராவினையே தஞ்சாவூருக்கு வரவிடாமல் தடுக்க கொலைமுயற்சிவரை சென்ற கூட்டம் அது, இவரை விடுவார்களா?

தமிழன் தேசியவாதி ஆக கூடாது, அதுவும் பிரதமர் ஆகவே கூடாது, அப்படி நடந்துவிட்டால் கட்சி வளர்ந்துவிடும் என பல கணக்குகள் போடபட்டன‌

அரசியல் களத்தில் நம்பியவர்களால், அதுவும் தமிழர்களால் முதுகில் குத்தபட்டார் மூப்பனார்

மிக நுட்பமாக அவரை சாய்த்துவிட்டுத்தான் கன்னடன் தேவகவுடாவினை பிரதமராக்கினார்கள்

தமிழன் மூப்பனார் பிரதமராகி இருந்தால் முதல் தமிழன் என்ற பெருமையோடு காவேரி சிக்கலுக்கு முடிவு கட்டி இருப்பார்

அதையும் கெடுத்து, காவேரியினையும் கெடுத்தார்கள்

இவ்விஷயத்தில் மனம் நொந்தார் மூப்பனார், பெரும் மனநெருக்கடிக்கு தள்ளபட்டார்

மூப்பனாரும் முதல் முறையாக தடுமாறினார்,உடல் நலம் குன்றினார், நண்பன் என முதுகில் குத்தியவர்களை விட எதிரியே பரவாயில்லை என்ற முடிவிற்கு வந்தார்

அத்தோடு அவர் காலமும் முடிந்தது, அவருக்கு பின்னர் அவர் கட்சி அவர் மகனால் காங்கிரஸில் இணைந்தது, பின் கொஞ்சவருடம் முன்பு அவர் மகன் மறுபடி தனிகட்சி தொடங்கினார்

மூப்பனார் காமராஜரின் வாரிசாகவே இங்கு காங்கிரஸில் வலம் வந்தார், காமராஜரை டெல்லி புரிந்து கொள்ளாதது போலவ பின்பு மூப்பனாரையும் புரிந்து கொள்ளவில்லை

ராஜிவ் காந்திக்கு பின் மூப்பனாரை புரிந்து கொள்ள டெல்லி தடுமாறியது, தமிழ்மாநில காங்கிரஸ் எனும் பெரும் எதிர்காலம் கொண்ட இயக்கத்தை கூட அது நல்ல வகையில் கட்சிக்காக பயன்படுத்தவில்லை

கூட்டி கழித்து பார்த்தால் மூப்பனாருக்கு ஒரு இழப்புமில்லை, அவரை சரியாக பயன்படுத்தாத காங்கிரஸ் கோபாலபுரத்தில் சில சீட்டுகளுக்காக காத்திருக்கின்றது

1967ல் அரியணை இழந்த காங்கிரஸின் பலம் ஒன்றும் அழிந்துவிடவில்லை என 1996ல் காட்டியவர் மூப்பனார்

அந்த டெல்லி காங்கிரஸின் குளறுபடியே இங்கு மூப்பனார் பெரும் பதவிக்கு வராமல் போனதும், இன்னும் காங்கிரஸ் தொங்கி கொண்டிருப்பதும்

காமராஜருக்கு பிறகு மூப்பனார் வடிவில் வந்த வாய்பினையும் வீணாக்கியது டெல்லி

எது எப்படி ஆயினும் உண்மையான தேசபக்தனாக, கரைபடியா கரங்களுடன் இறுதிவரை காங்கிரஸ்காரனாக நின்ற அந்த மக்கள் தலைவனை மறக்க முடியாது

காமராஜரை சத்தம் போட்டே சரித்தவர்கள், அவரின் சீடரான மூப்பனாரை சத்தமில்லாமல் சரித்தார்கள், இங்குள்ள அரசியல் அப்படி

இன்று அவரின் பிறந்த நாள், காமராஜருக்கு பின் தமிழகம் கண்ட அந்த தவபுதல்வனுக்கு, தேச பக்தனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

மூப்பன் என்ற வார்த்தைக்கு பெரியவர், வழிகாட்டுபவர் என பொருள்

உண்மையிலே இந்த கருப்பையா என்பவர் மூப்பன் என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர், தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் நல்வழி காட்டினார், மறக்க முடியாது

அந்த மக்கள் தலைவனுக்கு மாபெரும் அஞ்சலிகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here