செண்பகராமன் பிள்ளை லட்சுமிபாய் இவர்களை மறந்தது இந்தியாவின் வரலாற்றுப்பிழை அல்லவா?

செண்பகராமன் பிள்ளை – லட்சுமிபாய்:

இவர்களை மறந்தது இந்தியாவின் வரலாற்றுப்பிழை அல்லவா? மிதவாதத்தை நம்பாத நேதாஜி, கடல் தாண்டிச் சென்று படை திரட்டுவதற்கு முழு முக்கிய காரணமாக இருந்தவர் செண்பகராமன் பிள்ளை என்ற உண்மை இந்தியர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

நேதாஜி தொடர்பான ஆவணங்கள், மக்கள் முன்பு ரகசியம் உடைத்து விரிக்கப்பட வேண்டும் என்ற விருப்பம், அண்மையில் நாடு தழுவிய அளவில் எழுந்தது. ஆனால், நேதாஜிக்கே வழிகாட்டியாக இருந்த, சுதந்திரத்திற்காக போராடிய, கற்பனைக்கும் எட்டாத வீரம் பொதிந்த செண்பகராமன் பிள்ளை தொடர்பான விஷயங்கள் சொந்த நாட்டில் யாருக்கும் தெரியாமல் போனது எவ்வாறு?…

வீரச் செண்பகராமன் பிள்ளை இப்போதாவது அனைவராலும் அறியப்பட வேண்டும்; அவர் தொடர்பான ஆவணங்கள் ஆராயப்பட வேண்டும்; அவர் வீரம் ஆராதிக்கப்பட வேண்டும் என்று ஒரு குரல்கூட எழாமல் இருப்பது விந்தையே….எம்டன் கப்பலை கொண்டுவந்து தாக்குதல் நடத்திய ஒரே இந்தியன்

1914ஆம் ஆண்டு எம்டன் என்ற மகா நாசகரக் கப்பலை இந்தியாவுக்கு கொண்டு வந்து, பிரிட்டிஷ் இந்தியா மீது தாக்குதல் தொடுத்தார் செண்பகராமன் பிள்ளை. திருவனந்தபுரத்தில் பிறந்து, ஜெர்மனியில் தங்கி, சொந்த நாட்டின் சுதந்திர சுவாசத்திற்காக இயங்கி வந்த பிள்ளை, இந்தியர்களை மோசமாக விமர்சித்த ஹிட்லரை முகமுகமாக எதிர்த்த வீரன்.

ஜெர்மனியில் 1933-இல் ஜனநாயக நாற்காலியை உடைத்து, சர்வாதிகார சிம்மாசனத்தில் அமர்ந்தார் ஹிட்லர். “நீர், கருத்த இதயத்துக்குச் சொந்தக்காரன்” என்ற செண்பகராமனின் கொதிவார்த்தைகளால் சூடுண்ட ஹிட்லர், உக்கிரத்திரத்தின் உச்சிக்குச் சென்றார் . தன்னுடன் நல்ல நட்பில் இருந்த அவரை, பிரிட்டிஷாருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததற்காக, கடுமையாக சாடினார் பிள்ளை.

செண்பகராமன் பிள்ளையை அடித்துக்கொன்ற ஹிட்லர்

பழிவாங்கும் நஞ்சை மனதிற்குள்ளேயே வைத்திருந்த ஹிட்லர், செண்பகராமன் பிள்ளையை தனது வீரர்கள் மூலம் அடித்துக்கொன்றார். சொந்த தேசத்தின் விடுதலைக்காக படை கொண்டுவர, தனி மனிதனாக சென்ற பிள்ளை, 1934ஆம் ஆண்டு இத்தாலியில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
எம்டன் கப்பலை சென்னைக்கு கொண்டு வந்து தாக்குதல் நடத்திய செண்பகராமன் பிள்ளை குறித்து மேலும் அறிந்துகொள்ள இதற்கு முந்தைய கட்டுரையை இங்கே படியுங்கள்.

செண்பகராமன் பிள்ளையின் மனைவி லட்சுமிபாய், கணவனின் அஸ்தியுடன் 1935இல் ஜெர்மனியிலிருந்து மும்பை திரும்பினார். சுதந்திர இந்தியாவின் கொடி பறக்கும் கப்பலில், தன்னுடைய பிறந்த மண்ணுக்கு மிடுக்குடன் திரும்பி வர வேண்டும் என்பதே செண்பகராமன் பிள்ளையின் அந்திமகால ஆசையாக இருந்தது. கணவனின் ஆசையை நிறைவேற்ற லட்சமிபாய் காந்திருந்தது 32 நீண்ட நெடிய ஆண்டுகள்.

அந்நிய மண்ணில் உயிர்விட்ட அன்புக்கணவனின் இழப்பைத் தொடர்ந்து, மும்பை, டெல்லி பகுதிகளில் பல ஆண்டுகள் அலைந்து திரிந்தார் லட்சுமிபாய். நாட்டுக்கு சுதந்திரமும் கிடைத்து, நாட்களும் நகர்ந்தன. இறுதியில், 1966 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி, ஐ.என்.எஸ். டெல்லி என்ற போர்க்கப்பல் மூலம் மும்பையிலிருந்து, கேரளாவை நோக்கி வீரச் செண்பகராமன் பிள்ளையின் அஸ்தியுடன் பயணமானார் லட்சுமிபாய்.

19ஆம் தேதி கப்பல், கொச்சி துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சியது. பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரத்துக்கும் பின்னர் கன்னியாகுமரிக்கும் அந்தக் கப்பல் புறப்பட்டுச் சென்றது. (பிறந்த ஊருக்குப் பிள்ளையின் அஸ்தி வந்தது என்பதை அறிந்த பழம்பெரும் இதழான மலையாள மனோரமா நாளிதழ், வீரச்செண்பகராமனைப் பற்றி தலையங்கம் தீட்டியது.) கணவனின் சிதைதுகள்களை, அவரின் சுதந்திர மண்ணில் கலந்த லட்சுமிபாய், பின்னர் கணவரின் உறவினர்களோடு, சில காலம் கேரளாவிலேயே தங்கினார். பின்னர் மும்பைக்கு சென்ற லட்சுமிபாய், ஆசைக்கணவனைப் போலவே, 1972இல் நிர்க்கதியாக உயிரைவிட்டார்.இறுதிமூச்சை சுவாசித்துக்கொண்டிருந்த லட்சுமிபாய், மும்பையில் எப்படி இறந்தார் என்பதை, அங்கு அப்போதிருந்த மூத்த பத்திரிகையாளரான பி.கே. ரவீந்தரநாத், (இவர் மலையாளத்தில் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றான எழுத்தாளர் எம்.டி. எழுதிய ரண்டாம் மூழம் என்ற நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.) தான் மரணமடையும் முன்பு எழுதிய டைரிக்குறிப்புகளில் விவரித்துள்ளார். அதன் சுருக்கம் இதோ….

“நான் மும்பையில் 1969இல் ஒரு நிகழ்ச்சியில் பங்குகொள்ளச் சென்றேன். அப்போது லட்சுமிபாயை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவரின் கணவர் செண்பகராமன் பிள்ளை தொடர்பான அனைத்து ஆவணங்களும், அவர் எழுதிய கடிதங்களும் தன்னிடம் உள்ளதாகக் கூறினார். அவற்றை என்ன செய்யலாம் என்பதாக இருந்தது லட்சுமிபாயின் கேள்வி. அவற்றைப் படித்து ஒரு சுயசரிதையாக எழுதலாம் என்று நான் யோசனைகூறினேன். 1 லட்சம் ரூபாய் பணம் தேவை என்றும், பணத்தைக் கொடுத்துவிட்டு அனைத்து ஆவணங்களையும் எடுத்துக்கொள்ளும்படி வலியுறுத்தினார்; ஆனால் அப்போது என் கையில் அவ்வளவு பணம் இல்லை.”

“அதைத் தொடர்ந்து நான் லட்சுமிபாயை பல தவணை சந்தித்தேன் என்றாலும், ஆவணங்கள் அடங்கிய பெட்டியை அவர் திறந்து காட்டவே இல்லை. ஆனால், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த வேதனைகளை, வாழ்க்கை சம்பவங்களை இதயம் திறந்து கொட்டினார்.”

“மகாராஷ்டிராவில் ஸதாரய் பகுதியில் திக்குத்தெரியாத அபலை இளம்பெண்ணாய் அலைந்து திரிந்தவர்தான் லட்சுமிபாய். அவரைக்கண்ட ரஷ்யாவைச்சேர்ந்த கிறிஸ்தவ மிஷனெரி ஒருவர், ரஷ்யாவுக்கு அழைத்துச் சென்றார். லட்சுமிபாயை மகள்போல் வளர்த்து வந்த அந்த மிஷனெரி, ரஷ்யப்புரட்சியைத் தொடர்ந்து, ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்தார். வளர்ப்பு மகள் லட்சுமிபாயுடன் சென்ற அவர் பெர்லினில் அடைக்கலம் புகுந்தார்.”

“அங்கு வைத்து செண்பகராமன் பிள்ளையை சந்தித்தார் லட்சுமிபாய். இருவருக்குள்ளும் காதல் அரும்பி, அது அவர்களை கல்யாணத்தில் இணைத்தது.”

“சொந்த நாட்டு விடுதலைக்கான போராட்டமே அனுதின உணவாகிப்போன பிள்ளைக்கு ஏற்பட்ட மரணம், லட்சுமிபாயை உலுக்கிப்போட்டது. அந்நிய மண்ணில் நிராசையாக, நிர்க்கதியாக நின்றாலும், பிள்ளை தொடர்பான ஆவணங்கள், ஹிட்லரின் நாஜிகளின் கைகளுக்குச் சென்றுவிடக்கூடாது என எச்சரிக்கையான அவர், அவற்றை பத்திரப்படுத்தி இந்தியாவுக்கு கொண்டுவந்தார். எப்படியும் ஆங்கிலேயர்கள் தன்னைக் கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்திலேயே சுதந்திரம் கிடைக்கும் நாள்வரை வாழ்ந்திருக்கிறார் லட்சுமிபாய். பின்னர் அவரை அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், மும்பை சர்ச் கேட் பகுதியில் ரவீந்தரா மேன்ஷனில் ஒரு வாடகை வீட்டில் தங்கவைத்தார்.”

ஓர் அநாதைப்பிணம் கிடக்கிறது; வந்து அடையாளம் சொல்லுங்கள்

“யாருமில்லாத லட்சுமிபாய்க்கு மும்பையில் மீண்டும் ஏகாந்த வாசம் தொடங்கியது. சிறு சகாயத்திற்கும்கூட யாருமில்லாத சூழல். ஒருநாள் அவர், தனக்கு மிகவும் உடல் வருத்தமாக இருக்கிறது என்றும், வெளியே வரக்கூடமுடியவில்லை என்றும் கூறி, என்னைப் பார்க்க வேண்டும் என்றார். கொஞ்சம் உணவும், கொஞ்சம் பழங்களையும் வாங்கிக்கொண்டு நான் அங்கு சென்றேன். அவர் சாப்பாடு செய்திருக்கவில்லை; மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்க ஏற்பாடு செய்யலாம் என நான் கூறியதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.”

“1972 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு இரவு. மும்பை செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. ஒரு சவசரீரத்தை அடையாளம் காட்ட நீங்கள் வர வேண்டும் என்பதற்காக இருந்தது அந்த அழைப்பு. உடனடியாக நான் சென்று பார்த்தேன். அங்கு, உணவுத்தாழ்ச்சியில் உடல் மெலிந்து, எலும்பே தோலாக மாறி மரணித்துப்போயிருந்தார் லட்சுமிபாய். அப்போதும் அவரிடம் 17 சாவிகள் அடங்கிய கொத்து பத்திரமாக இருந்தது. தனது கணவர் செண்பகராமன் பிள்ளை தொடர்பான ஆவணச் சான்றுகளை, பெருந்தொகை ரொக்கத்தைப்போல பத்திரப்படுத்தியிருந்தார் லட்சுமிபாய்.”

இவ்வாறாக மூத்த பத்திரிகையாளர் பி.கே. ரவீந்திரநாத்தின் டைரிக்குறிப்பில் எழுதியிருந்தது.

பத்திரிகையாளர் ரவீந்திரநாத், அதிமுக்கியமான விஷயமொன்றை செய்திருந்தார். அதாவது, செண்பகராமன் பிள்ளை தொடர்பான அனைத்து ஆவணங்களையும், தேசிய ஆவணக் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அப்போதைய மகாராஷ்டிரா முதலமைச்சருக்கு கடிதம் எழுதுகிறார்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக லட்சுமிபாயின் வீடு போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர், 1973ஆம் ஆண்டு, அனைத்து ஆவணங்களும் தேசிய ஆவணக் காப்பகத்தில் பத்திரமாக சேர்க்கப்பட்டன. பிள்ளை தொடர்பான அனைத்து ரகசியங்களும் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
(யாராவது அந்த ஆவணங்களைப் பார்த்து, கூடுதல் விவரங்களை வெளிக்கொணருவார்கள் என நாம் நம்புவோம்)

செண்பகராமன் பிள்ளையுடன் இருந்த புரட்சிக்காரர்கள் பிறகு என்ன ஆனார்கள்?

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் செண்பகராமன் பிள்ளையுடன் இந்திய சுதந்திர லீக் படையில் (இந்தியன் இன்டிபென்டன்ட் லீக்) இயங்கி வந்த மலையாளிகள் பலரும் சொந்த நாட்டுக்கு திரும்பிவிட்டனர். இந்திய சுதந்திரத்திற்காக ரகசியமாக செயலாற்ற வேண்டும் என்பதே அவர்களின் திட்டம். சி.வி. ராமன் பிள்ளையின் மருமகன் ஏ.ஆர். பிள்ளையை, பல ஆண்டுகள் கழித்தே இந்தியாவுக்குள் பிரிட்டிஷ்காரர்கள் அனுமதித்தனர். என்றாலும் அவரை பிரிட்டிஷ் உளவாளிகள் பின்தொடர்ந்துகொண்டே இருந்தனர். செண்பகராமன் பிள்ளை வெளிநாடு செல்லக் காரணமானவரும், மெத்தப் படித்தவருமான டி. பத்மநாப பிள்ளையின் வாழ்க்கை முடிவு, வேதனை நிறைந்ததாக, கோரமானதாகவே அமைந்தது.

இரண்டாம் உலகப்போருக்கு நடுவில் டி.பத்மநாப பிள்ளை ஜெர்மனியிலிருந்து திருவனந்தபுரத்துக்குத் திரும்பினார். அப்போது ராஜ வைத்தியராக இருந்த அவரின் மாமனாரின் முயற்சியில், ஒரு அருங்காட்சியகத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டார். என்றாலும் ரகசிய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை டி.பத்மநாப பிள்ளை நிறுத்தவில்லை. இதை பிரிட்டிஷ் உளவாளிகள் கண்டிப்பாக மோப்பம் பிடித்திருக்க வேண்டும்.

படிப்பில் மேதமைக் கண்ட டி. பத்மநாப பிள்ளை, தவளைகள் குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெறுவதற்கான கட்டுரைகளை, சுவிட்சர்லாந்து பேன்ஸ் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க புறப்பட்டார். ஆனால் அவர் உயிருடன் திருவனந்தபுரத்திற்கு திரும்பவில்லை. எங்கோ மாயமானார் என்ற செய்தி மட்டும், பல இடங்களில் ஓய்வெடுத்து காற்று வழியாக மெதுவாக வந்து சேர்ந்தது. மும்பை துறைமுகம் வழியாகவோ, கொச்சி துறைமுகம் வழியாகவோ வராமல், சிங்கப்பூர் வழியாக வந்த டி.பத்மநாப பிள்ளையை, எங்கோ இடைமறித்த பிரிட்டிஷ் உளவாளிகள் கொன்றுபோட்டிருக்க வேண்டும் என்பதே, இன்றுவரை நம்பப்படும் செய்தி. இந்திய சரித்திரத்திலிருந்து பரிதாபமாய் மறைந்த பத்மநாபன். பத்மநாப பிள்ளையின் சடலம் கிடைக்கவில்லை. ஆனால் அவர் அணிந்திருந்த கோட் மட்டும் தாய்லாந்து கடலருகே கரை ஒதுங்கியது. ஆனால் அதேசமயம் பத்மநாப பிள்ளையின் சூட்கேஸை, சில சொந்த பந்தங்கள் கொழும்புக்குச் சென்று அவரிடம் பெற்றுக்கொண்டு திரும்பியதாக, திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்த வெள்ளாளச் சமுதாயங்களைக் குறித்து புத்தகம் எழுதிய டாக்டர் நந்தியத் ஆர் சோமன், தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

பத்மநாப பிள்ளையின் மாயமரணத்திற்குப் பிற்பாடு, பிரிட்டிஷாரின் கோபப்பார்வை தன் மீது திரும்பும் என பயந்த அவரின் மாமனார், தனது மருமகன் தொடர்பான அனைத்து ஆவணங்கள், சான்றுகள், கடிதங்களை நெருப்பிட்டுக் கொளுத்திவிட்டார். காற்றில் கனல் ஜுவாலையாகிக் கலந்த அந்தக் காகிதங்களைப்போல, புரட்சியாளர்கள் சரித்திரத்திலிருந்து டி.பத்மநாப பிள்ளையும் மாயமாகியிருந்தார்.

இதனிடையே, மற்றொரு புரட்சியாளரும், செண்பகராமன் பிள்ளையுடன் இருந்தவருமான ஏ.சி.என். நம்பியார், கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் தங்கை சுஹாசினியை மணம் முடித்தார். ஆனால் கொஞ்சகாலத்தில் இருவரும் பிரிந்தனர். பிறகு அவர், ஜெர்மனியின் இந்திய தூதுவராக நியமனம் செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here