
டெல்டா மாவட்ட விவசாயிகளின் விவசாயக் கடன்கள் மொத்தத்தையும் மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்யவேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கஜா புயலால் தங்கள் வாழ்வாதாரத்தையே தொலைத்து விட்டு நிற்கின டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு அன்புக்கரங்களும் ஆதரவுக்கரங்களும் நீண்டு வருகின்றன. நிவாரணப் பொருட்களை தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள், திரைப் பிரமுகர்கள் பலரும் வழங்கி வருகின்றனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தங்களின் கட்சி சார்பில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:
இதுவரை இல்லாத அளவுக்கு, டெல்டா மாவட்ட மக்கள் அப்படியொரு துயரத்தில் மூழ்கியிருக்கிறார்கள். தங்களின் வாழ்வாதாரத்தையே இழந்துவிட்டு நிற்கிறார்கள்.
மேலும் டெல்டாவின் 4 மாவட்டங்களில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளின் விவசாயக் கடன், கூட்டுறவு சங்கக் கடன் உள்ளிட்ட கடன்களை தமிழக அரசு, மத்திய அரசு ஆகியவை ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்யவேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.