பட்டுக்கோட்டையில் மண்சட்டி ஏந்தி தமிழ் மாநில காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

கஜா புயலில் பாதிப்படைந்த விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முழு நிவாரணம் வழங்கக் கோரி பட்டுக்கோட்டை சட்டமன்ற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மண் சட்டி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை (அறந்தாங்கி முக்கம்) காந்தி சிலை அருகில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.எல்.ஏ சிதம்பரம், என்.ஆர் நடராஜன், தஞ்சை மாநகரத் தலைவர் டி.ராஜவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவர் ஏ.கே குமார் வரவேற்றுப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும், கஜா புயலில் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் தென்னை கன்றுகள் இறக்குமதி செய்து வழங்க வேண்டும், பாதிப்படைந்த மீனவர்களுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும், சேதமடைந்த படகுகளுக்கு மாற்றாக புதிய படகுகள் வழங்க வேண்டும். மீனவர்களுக்கு மானியக் கடன் வழங்க வேண்டும், காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கியும், கஜா புயலில் பாதிப்படைந்த குடிசை, ஓட்டு வீடுகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து கான்கிரட் வீடுகளாக கட்டித் தரவேண்டும், தென்னை விவசாயக் குடும்பங்களை காப்பாற்ற அவர்களின் விவசாயக் கடன், கல்விக் கடன், வீட்டுக்கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

முடிவில், அக்கட்சியின் பட்டுக்கோட்டை வட்டாரத் தலைவர் பி.வைத்திலிங்கம் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், பட்டுக்கோட்டை வட்டாரத் தலைவர் ஜெ.ஏ பழனிவேல், மதுக்கூர் வட்டாரத் தலைவர் எஸ்.வி ரவிச்சந்திரன், மதுக்கூர் பேரூர் தலைவர் ஆர். புஷ்பநாதன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட தமாகாவினர் கலந்துகொண்டனர்.

#tamilmaanilacongress #tmcfortn #tnpolitics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here