தமாகாவின் சைக்கிள் சின்னம் – தேர்தல் ஆணையத்தின் உத்தரவு ரத்து

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம், சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் 8 வார காலத்துக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தாக்கல் செய்த மனுவில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்த ஜி.கே.மூப்பனார், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி கடந்த 1996-ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கியதுடன் மாநில கட்சிக்கான அங்கீகாரத்தையும் வழங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த 1996-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 20 தொகுதிகளிலும் தமாகா வெற்றி பெற்றது. அப்போது நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட்டு 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
கட்சியின் தலைவர் மூப்பனாரின் மறைவுக்குப் பின் கட்சியின் தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டேன். இந்த நிலையில் கடந்த 2001-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் தமாகா இணைக்கப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியுடனான இணைப்பு தொடர்பாக உறுப்பினர் ஒருவர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் தமாகா அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக செயல்பட முடியாது என்றும், கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க முடியாது என கடந்த 2004-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சிக்கும் எனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014-ஆம் ஆண்டு கட்சியிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என்ற கட்சியைத் தொடங்கினேன். எங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கக் கோரி கடந்த 2015-ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட மனுக்களைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இதனால் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டோம். கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை செயல்பட்ட எங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ஞானதேசிகன், வழக்குரைஞர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டு, மனுதாரர் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புதிய மனு தாக்கல் செய்யவும், அந்த மனுவை தேர்தல் ஆணையம் 8 வார காலத்துக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here