மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை எரித்த விவகாரத்தில் மத்திய அரசு நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி கே வாசன்

மகாத்மா காந்தியின் உருவப் படத்தை சுட்டு, தீ வைத்தவர்கள் அனைவரையும் காலம் தாழ்த்தாமல் கைது செய்யவும், வழக்கு பதிவு செய்து தண்டனையை வழங்க வேண்டும். இதில் மத்திய அரசே நேரடியாக தலையிட வேண்டும்

மத்திய, மாநில அரசுகள் தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு நாளை அனுசரித்து வரும்போது உத்தரப்பிரதேசத்தில் காந்தியின் உருவ பொம்மையைச் சுட்ட நிகழ்ச்சி கொடுமையான ஒன்று. நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைப்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, அறவழியில் போராடி சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தவர் காந்தியடிகள்.

மகாத்மா காந்தியின் நினைவு நாளான கடந்த ஜனவரி 30-ம் தேதியன்று சிலர் காந்தியின் உருவ பொம்மையை சுட்டு, தீ வைத்து எரித்தது கண்டிக்கத்தக்கது. சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வேகமாகப் பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த அசம்பாவிதத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து உரிய நடவடிக்கையை சட்டத்திற்கு உட்பட்டு எடுத்திருக்க வேண்டும்.

இந்த வீடியோவைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. இதனை பார்த்த மக்களும், இதைப்பற்றி கேள்விப்பட்ட மக்களும் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தர வாழ்க்கையையே அர்ப்பணித்த மகாத்மாவின் உருவப் படத்தை சுட்டு, தீ வைத்தவர்களை தண்டிப்பதில் இருந்து மாநில அரசு விலகி செல்லக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும் என எதிர்பாக்கிறார்கள்.

தேசத்தந்தையை அவமதிக்கும் வகையில் நடைபெற்ற இந்த கொடூரச் செயலுக்கு உரிய நடவடிக்கையை உடனே எடுத்து, அதற்குண்டான தண்டனையையும் காலத்தே கொடுத்தால்தான் நம் நாட்டில் இது போன்ற ஒரு அநாகரீகச் செயல் இனிமேல் நடைபெறாமல் இருக்கும்.

எனவே மகாத்மாவின் உருவ பொம்மையை அவமதிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்யவும், வழக்கு பதிவு செய்யவும், கடுமையான தண்டனையை வழங்கவும் மத்திய அரசே நேரடியாக தலையிட வேண்டும்.

ஜி கே வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்

#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here