தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவு – ஜிகேவாசன்

தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன். தூத்துக்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி தொடர்பாக பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன. யூகங்களுக்கு தற்போது பதில் கூற முடியாது. தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் எந்தக் கட்சியுடன் கூட்டணியில் இடம்பெறும் என்பது அறிவிக்கப்படும். எங்களுக்கு ஒத்த கருத்துடைய கட்சி மற்றும் மக்கள் விரும்பும் வகையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெறும். மத்திய, மாநில அரசுகள் விவசாயம் உள்ளிட்ட பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நிதிநிலை அறிக்கையை அரசியலாக பார்க்கக் கூடாது. மக்களின் எதிர்பார்ப்பை இன்னும் பூர்த்தி செய்து இருக்கலாம்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பொலிவுறு திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு பதிலாக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விவிடி சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைக்கவும், திருச்செந்தூரில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜி.கே. வாசன், காமராஜர், மூப்பனார் வழியில் முதல் வரிசை கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்றும், தேர்தலில் பலன் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்ற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்தும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்டிஆர் பள்ளியில் நிறுவப்பட்டுள்ள, விவசாய சங்கப் பிரதிநிதி சாமுவேல் நாடார் சிலையை ஜி.கே. வாசன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன், எஸ்டிஆர் விஜயசீலன், பொன்சீலன், சாமுவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here