துரோகம் செய்தது ஜி.கே.வாசனா? அல்லது ப.சிதம்பரமா?- கே.எஸ்.அழகிரிக்கு தமாகா கண்டனம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த போது இளங்கோவன் செய்யாத விமர்சனமா? துரோகம் செய்தது தலைவர் ஜி.கே.வாசனா? அல்லது ப.சிதம்பரமா? என்று தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

”தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி என்பது பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோரது ஆசியோடு அவர்கள் காட்டிய பாதையில் பயணிக்கும் கட்சியாகும். எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெகுதூரம் விலகி வந்து தமிழ் மாநில காங்கிரஸ் என்ற மாநிலக் கட்சியாக செயல்பட்டு வருகின்றோம். காங்கிரஸ் கட்சி நண்பர்களை எப்போதும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்று ஒருபோதும் கூறியதில்லை. தவறு யார் செய்தாலும் அரசியல் ரீதியாக, நாகரிகமாக விமர்சனம் செய்யும் எல்லா உரிமையும் தமிழ் மாநில காங்கிரஸுக்கும் உண்டு காங்கிரஸ் கட்சிக்கும் உண்டு. ஆகையால் விமர்சனம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை.

எங்கள் தலைவர் 10 ஆண்டு காலம் மத்திய அமைச்சர் பதவி வகித்தார் என்று கூறுகிறீர்கள். 2001-ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகச் செயல்பட்டது. பிறகு 2002-ல் தலைவர் ஜி.கே வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை காங்கிரஸ் கட்சியோடு இணைத்து, தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து மத்திய அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். ஆனால் ப. சிதம்பரம் வெறும் இருபத்தி மூன்று நபர்களைத் தன்னோடு ரயிலில் அழைத்துக்கொண்டு போய் எதன் அடிப்படையில் பதவியை பெற்றார் என்று கே.எஸ் அழகிரி விவாதிக்கத் தயாரா?

எங்களது தலைவர் ஜி.கே வாசன் ஐயா மூப்பனார் பெயரை வைத்துக் கொண்டு அரசியலுக்கு வந்ததாக கூறுகிறார்கள். ராகுல் காந்தி எந்தப் பெயரை வைத்துக் கொண்டு அரசியலுக்கு வந்தார்? ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தியின் பெயரை வைத்துக் கொண்டுதான் ராகுல் காந்தி அரசியலுக்கு வந்தார். ஸ்டாலின் எப்படி அரசியலுக்கு வந்தார்? உதயநிதி ஸ்டாலின் எப்படி அரசியலுக்கு வந்தார்? இதைப்பற்றி எல்லாம் கேள்வி கேட்க கே.எஸ் அழகிரிவுக்குத் தகுதி இருக்கின்றதா? அரசியலில் வாரிசுகள் வருவது இயல்பான ஒன்றுதான்.

அரசியலுக்கு வந்த பிறகு அவர்களின் செயல்பாட்டினை பற்றி மட்டுமே விமர்சனம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகாலம் மத்திய அமைச்சராக எங்கள் தலைவர் இருந்தபோது, அவர் மீது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டு உங்களால் கூற முடியுமா? ஆனால், அப்போது மத்திய அமைச்சராக இருந்த திரு ப. சிதம்பரம் பற்றி விவாதிக்க உங்களுக்கு தைரியம் உண்டா?

ஏற்கெனவே ஆள் பிடிக்கும் வேலையை மட்டும் செய்து கொண்டிருக்கும் கே.எஸ் அழகிரி எங்கள் தலைவரைப் பற்றி விமர்சனம் செய்து பிரபலமாகப் பார்க்கிறார்கள். உங்கள் கேள்விகளுக்கு எங்களால் நாகரிகமாக பதில் கூற முடியும். குற்றச்சாட்டை கூறுங்கள், நாங்கள் பதிலளிக்கிறோம். காங்கிரஸ் கட்சியில் அதிக துரோகம் செய்து பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் யார் என்று விவாதிக்க நீங்கள் தயாரா?

அரசியலில் துரோகம் என்று எதுவும் கிடையாது. தந்தை பெரியாரை எதிர்த்துதான் அண்ணா கட்சி ஆரம்பித்தார். நெடுஞ்செழியன் போன்ற மூத்த தலைவர்களை எதிர்த்துதான் கலைஞர் திமுக தலைவர் ஆனார். எம்.ஜி.ஆர் திமுக தலைமையை எதிர்த்துத் தான் அதிமுக தலைவர் ஆனார். பெருந்தலைவரை எதிர்த்துதான் இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியை உடைத்து வெளியே வந்தார். எங்களுடைய தலைவர் துரோகி என்றால் இவர்களெல்லாம் துரோகி என்று கூறுவதற்கு கே.எஸ். அழகிரி தயாரா? அரசியலை அரசியலாக மட்டுமே பார்க்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரையில், மக்கள் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுப்போம். மீறி எங்களைப் பற்றி விவாதம் செய்யத் தயார் என்றால், சத்தியமூர்த்தி பவனில் விவாதம் செய்ய நாங்கள் தயார் நீங்கள் தயாரா?

இப்போது இருக்கும் சத்தியமூர்த்தி பவன் காமராஜர் இருக்கும்போது காங்கிரஸ் கட்சிக்கு சொந்தம் கிடையாது. ஆனால், இப்போது வரை சத்தியமூர்த்தி பவனை காங்கிரஸ் கட்சி சொந்தம் கொண்டாடி வருகிறது. மறைந்த தலைவர் ஐயா மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கியதில் இருந்து பிறகு தலைவர் ஜி.கே. வாசன் 2002-ல் காங்கிரஸ் கட்சியோடு இணைந்ததுவரை தமிழ் மாநில காங்கிரஸுக்கு சொந்தமாக இருந்தது சத்தியமூர்த்தி பவன். ஆகையால், எங்களுக்கு சொத்து மேல் ஆசை கிடையாது. காமராஜர் கட்டிக் கொடுத்த சத்தியமூர்த்தி பவனில், கலைஞர் படத்தை வைத்து எப்படி அவர்கள் மரியாதை செலுத்தினார்கள்? காமராஜரின் பிறந்த நாளன்று அண்ணா அறிவாலயத்தில் ஏன் காமராஜர் படத்தை வைத்து மரியாதை செலுத்தவில்லை? அதைப் பற்றி கே.எஸ். அழகிரி கேள்வி கேட்கத் தயாரா? பதவிக்காகவும், சூழ்நிலைக்காகவும் அலைவது காங்கிரஸ் கட்சியே தவிர எங்கள் கட்சி இல்லை.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா கேட்டுக்கொண்டபோது அதை ஏற்றுக்கொண்டு நாங்கள் 10 சட்டப்பேரவை உறுப்பினர்களை உருவாக்கி இருப்போம். ஆனால், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற இயக்கம் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகவே இருக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் போராடினோம். எங்களுக்கு தன்மானத்தைப் பற்றியும், அரசியல் சூழ்நிலைகளைப் பற்றியும் சொல்லிக்கொடுக்கும் தகுதி கே.எஸ். அழகிரிக்கு கிடையாது. இப்படி போலித்தனமாக பேசி அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்கள் தலைமைக்கோ, எங்களுக்கோ ஒருபோதும் கிடையாது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த போது இளங்கோவன் செய்யாத விமர்சனமா? துரோகம் செய்தது தலைவர் ஜி.கே. வாசனா? அல்லது ப. சிதம்பரமா?”.

இவ்வாறு யுவராஜா தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here