மத்திய அரசு ஊரடங்கை கவனத்தில் கொண்டு அனைத்து வித பொது போக்குவரத்து வாகனங்களுக்கான காப்பீட்டு பிரீமியத் தொகையை ஓராண்டுக்கு உயர்த்தாமல் இருக்க வேண்டும் – ஜி கே வாசன்

மத்திய அரசு ஊரடங்கை கவனத்தில் கொண்டு அனைத்து வித பொது போக்குவரத்து வாகனங்களுக்கான காப்பீட்டு பிரீமியத் தொகையை ஓராண்டுக்கு உயர்த்தாமல் இருக்கவும், பொது போக்குவரத்து வாகனங்களை இயக்க முடியாத நாட்களை நடப்பு ஆண்டுக்கான பிரீமியத்துக்கான நாட்களுடன் கூடுதலாக சேர்த்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு நாடு முழுவதும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கவனத்தில் கொண்டு பல்வேறு நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது பயன் தருகிறது.

கொரோனாவால் ஊரடங்கு அமலில் இருப்பதால் அத்தியாவசியத் தேவைக்கு தவிர மற்ற வாகனப் போக்குவரத்து நடைபெறவில்லை. மேலும் நாடு முழுவதும் பொது போக்குவரத்துக்கான வாகனங்கள் சுமார் 90 சதவீதம் இயக்கப்படவில்லை. எனவே வாகனப்போக்குவரத்து நடைபெறாமல் இருக்கின்ற இவ்வேளையில் சாலை விபத்துக்கள் முற்றிலும் இல்லை எனலாம்.

சாலை விபத்துக்கள், வாகன திருட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வாகன உரிமையாளர்களிடம் காப்பீட்டு நிறுவனம் வசூலிக்கும் காப்பீட்டு பிரீமியத் தொகையானது இப்போதைய ஊரடங்கு காலத்தில் பெருமளவு செலவிடப்படாது.

அதாவது வாகனத்தினால் ஏற்படும் விபத்து உள்ளிட்ட பல காரணங்களுக்காக கேட்கப்படும் நஷ்ட ஈடு பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பெரும் பலன் கிடைக்கிறது. ஆனால் பொது போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள வாகன உரிமையாளர்கள் ஊரடங்கு காலத்தில் வாகனத்தை இயக்க முடியாமல், பொருளாதாரத்தை ஈட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

எனவே காப்பீட்டு நிறுவனங்களைப் போல பொது போக்குவரத்து வாகன உரிமையாளர்களும் பலன் அடைய வேண்டும். இந்நிலையில் காப்பீட்டு நிறுவனங்கள் வாகனங்களுக்கான காப்பீட்டு பிரீமியத் தொகையை செலுத்த கால அவகாசம் கொடுப்பது மட்டும் போதாது காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையை ஒரு ஆண்டுக்காவது உயர்த்தாமல் இருக்க வேண்டும்.

அதாவது மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டம், ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டம் ஆகிய இரண்டு வகையான காப்பீட்டு திட்டத்துக்கும் காப்பீட்டுக்கான பிரீமியத்தை குறைந்த பட்சம் ஓராண்டுக்காவது உயர்த்தாமல் இருந்தால் தான் பொது போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள வாகன உரிமையாளர்கள் பயன் பெறுவார்கள். அது மட்டுமல்ல ஏற்கனவே பொது போக்குவரத்து வாகனங்களுக்கு காப்பீட்டு பிரீமியம் வாங்கியிருந்தால் இப்போதைய ஊரடங்கில் எத்தனை நாட்கள் வாகனங்களை இயக்க முடியவில்லையோ அத்தனை நாட்களை நடப்பு ஆண்டுக்கான பிரீமியத்துக்கான நாட்களுடன் கூடுதலாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எனவே ஊரடங்கு காலத்தையும், கொரோனாவால் பொது போக்குவரத்து வாகன உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பையும் கவனத்தில் கொண்டு பொது போக்குவரத்து வாகன காப்பீட்டுக்கான பிரீமியத்தை ஓராண்டுக்கு உயர்த்தாமல் இருக்கவும், பொது போக்குவரத்து வாகனங்களை இயக்க முடியாத நாட்களை நடப்பு ஆண்டுக்கான பிரீமியத்துக்கான நாட்களுடன் கூடுதலாக சேர்த்துக்கொள்ளவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

#ஜி_கே_வாசன்

தலைவர்

#தமிழ்_மாநில_காங்கிரஸ்

#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here