
ஒரு குவிண்டால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.4,000 ஆக நிர்ணயம் செய்க – ஜிகேவாசன் கோரிக்கை
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.4,000 ஆக விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:
“தமிழகத்தின் மூலாதாரமாக விளங்கும் விவசாயத்திற்காக காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12-ம் தேதி அன்று தமிழக முதல்வரால் திறக்கப்பட்டது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸின் பாதிப்பால் மக்களைப் பாதுகாக்க அறிவிக்கப்பட்ட மத்திய, மாநில அரசின் ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் பல்வேறு தொழில்துறைகள் பாதிக்கப்பட்டு பொருளாதார இழப்பைச் சந்தித்து வரும் வேலையில் கிராமம் முதல் நகரம் வரை மக்களின் அத்தியாவசியத் தேவையை பூர்த்தி செய்யும் விவசாயத்தையே அனைவரும் நம்பியிருக்கிறார்கள்.
விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த விவசாயத்தை நாம் பேணிக்காக்க வேண்டும். அதனால் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதோடு அவர்களுக்குத் தேவையான அளவுக்கு புதிய பயிர்க்கடன்களை வழங்க வேண்டும். விவசாயத்திற்குத் தேவையான தரமான விதை நெல், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் தங்கு தடையின்றி வழங்க வேண்டும். கடைமடை வரை தண்ணீர் செல்வதைக் கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அந்தந்தப் பகுதி விவசாயிகளைக் கொண்ட குழு ஒன்று அமைக்க வேண்டும்.
நடப்பாண்டில் குறுவை சாகுபடி 5 லட்சம் ஏக்கரிலும் தாளடி சாகுபடி 10 லட்சம் ஏக்கரிலும் சம்பா சாகுபடி 25 லட்சம் ஏக்கரிலும் நடைபெறும். இதனால் 150 லட்சம் டன் நெல் உற்பத்தியாகும். சென்ற ஆண்டில் 120 லட்சம் டன் நெல் உற்பத்தியானது. அதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 25 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்தது. மேலும், 5 லட்சம் டன் வரை கொள்முதல் நடைபெற்று வருகிறது. தற்போது நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,958 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.4,000 ஆக விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்”.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #TMC
#Covid19