
எள், நிலக்கடலை, உளுந்து ஆகிய விளைப் பொருள்களை, அரசே கொள்முதல் செய்து விவசாய பெருங்குடி மக்களின் நலன் காக்க வேண்டும்
அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஜி.கே.வாசன் வேண்டுகோள்
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஜி.கே.வாசன் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் ஆண்டில் எள் பயிரிடும் நிலப்பரப்பளவு 3 மடங்கு, அதாவது 1450 ஹெக்டேராக உயர்ந்துள்ளது. விளைச்சலும் திருப்திகரமாக உள்ளது, கடந்த ஆண்டு காள் விலை கிலோ ரூ.120 ஆக விற்றது, ஆனால் இந்த ஆண்டு கிலோ ரூ.80-க்கு மட்டுமே விற்கும் நிலை உள்ளது.
நிலக்கடலை பயிரிடும் பரப்பளவு 1,100 ஹெக்டேரில் இருந்து 1,320 ஹெக்டேராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு விலை கிலோ ரூ.63-ஆக இருந்தது இந்தாண்டு விலை கிலோ ரூ.55-ஆக குறைந்துவிட்டது. அதேப் போல் உளுந்து விற்பனை விலை கிலோவிற்கு ரூ.60-65 -க்கு மட்டுமே கிடைக்கிறது. கொரோனா காலத்தில் விலை பொருள்களுக்கு எதிர்பார்த்த நியாயமான விலை கிடைக்காதது, விவசாயிகளுக்கு மிகுந்து ஏமாற்றத்தையும், இழப்பையும் தருகிறது. ஆகவே எள், நிலக்கடலை, உளுந்து போன்ற விளைப் பொருள்களை நியாயமான, கட்டுப்படியான விலைக்கு, அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
விவசாயிகளின் உழைப்பிற்கும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் பயனள்ளதாக இருக்கும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.