
பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் மக்கள் மிகுந்த பாதிப்பை அடைந்துள்ளனர். கடந்த மே மாதத்தில் மட்டும் 17 முறை விலையேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
நாட்டையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் கொரோனா நோய் தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். இந்த நேரத்தில் எண்ணைய் நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை ஏற்றிக்கொண்டு இருப்பது, மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தற்பொழுது பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவிற்கு சென்னையில் ரூபாய். 95 ரூபாய் 28 பைசாவிற்கும், டீசல் 89 ரூபாய் -39 பைசாவிற்கும் -க்கும் விற்கபடுகிறது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் 100 ரூபாயை நெருங்கிவிட்டது. இந்த விலையேற்றத்தால் மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. இது மக்களை மேலும் பாதிப்படைய செய்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை அந்தந்த எண்ணைய் நிறுவங்களே நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அவர்களுக்கு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. இதனால் எண்ணைய் நிறுவனங்கள் தாங்களே விலையை நிர்ணயம் செய்துகொண்டு, விலையேற்றம் செய்துகொண்டு இருக்கிறது. இந்நிலை இனிமேலும் தொடராமல் இருக்க மத்திய அரசு அவர்களை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் அந்த அதிகாரத்தை தாங்களே எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதோடு மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். அப்படி குறைத்தால் பெட்ரோல் டீசல் விலை மேலும் குறையும். ஆகவே மத்திய, மாநில அரசுகள் நாட்டின் நலன் கருதியும், மக்கள் நலன் கருதியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.